தமிழர் கடற்பகுதியில் சிங்கள கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி : சத்தம் சந்தடியின்றி பணிப்புரை
முல்லைத்தீவு - புலிபாய்ந்தகல் கடற்கரையில் சிங்கள கடற்றொழிலாளர்களுக்கு தொழில் புரிய அனுமதி வழங்கும்படி கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சத்தம் சந்தடியின்றி பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் நன்னீர் கடற்றொழிலில் ஈடுபடும் சிங்கள கடற்றொழிலாளர்கள் குளத்து நீர் வற்றுக் காலத்தில் தங்களுக்குப் பாதிப்பு எனக் கூறி கடற்றொழிலுக்கு அனுமதி பெற முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
முரண்படும் நிலைமைகள்
அதற்காக அவர்களுக்கு அனுமதி வழங்கும் பணிப்புரைக் கடிதம் நேற்றுமுன்தினம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளரால் ஒப்பமிடப்பட்டு மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரதி வெலிஓயா கிராமப்புற கடற்றொழிலாளர் அமைப்பின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த வெலிஓயா கிராமப்புற கடற்றொழிலாளர் அமைப்பினரே வெலிஓயாவில் உள்ள குளங்களின் வற்றுக் காலத்தில் அனுமதியின்றி - அத்துமீறிய வகையில் - தண்ணிமுறிப்புக் குளத்தில் கடற்றொழிலில் ஈடுபட முயலுகின்றனர் என்பதும் - அந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்கனவே தண்ணிமுறிப்புக் குளத்தில் அனுமதியுடன் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் அவர்களுடன் முரண்படும் நிலைமைகள் ஏற்படுகின்றன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறு தண்ணிமுறிப்பில் ஏற்படும் பிரச்சினையைக் காரணம் காண்பித்து வெலிஓயாவில் வசிக்கும் சிங்கள கடற்றொழிலாளர்களுக்கு 15 மைல் தொலைவில் உள்ள தமிழ் கடற்றொழிலாளர்களின் பிரதேசத்தில் கடற்றொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டமை திட்டமிட்ட இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் என உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



