பௌத்த மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி மாநாடு
இலங்கையில் சிங்கள பௌத்த மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி மாநாடு ஒன்றை அகில இலங்கை பௌத்த பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த பேரவை வளாகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை 12ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு குறித்த மறுமலர்ச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
சிங்கள பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாத்து, கலாசார அடையாளத்தை நிலைநிறுத்தி, எதிர்காலத் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிக்கும் நோக்கில் அனைவரும் பிளவுகளைத் தவிர்த்து ஒற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டுமென குறித்த மாநாடு தொடர்பில் அகில இலங்கை பௌத்த பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்புச் செய்தி
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்புச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிங்கள பௌத்த மறுமலர்ச்சியை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும்.
நாம் பிரிந்து அழியப்போகின்றோமா அல்லது ஒன்றிணைந்து எழுச்சியடையப்போகின்றோமா என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தமக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும்.
எமது மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கும், எமது தனித்துவமான அடையாளத்தைப் பேணுவதற்கும், சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்காக ஒருமித்த நோக்குடன் கைகோர்ப்பதற்கும் அனைவரும் முன்வர வேண்டும்.

பிரிந்து செல்வதற்கும் பிளவுபடுவதற்கும் பதிலாக, ஒன்றிணைந்து எழுச்சியுடன் செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும்.
அனைவரும் அணிதிரள வேண்டும்
எமது தனித்துவம், கலாசாரம் மற்றும் மரபுரிமைகளை எதிர்காலத் தலைமுறையினருக்கு உரிய முறையில் கையளிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஒரே இலக்கின் கீழ் அனைவரும் அணிதிரள வேண்டும்.
சமூகத்தினரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி, பொதுவான நோக்கத்தை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்துக்கான சிறந்த சூழலை உருவாக்க முடியும்.
மேலும் பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக ஒற்றுமையின் வலிமையுடன் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஒன்றிணைவோம், அணிதிரள்வோம், எமது சிங்கள பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்றும் குறித்த அழைப்பிதழில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.