சிங்கப்பூரில் இலங்கையர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள்
சிங்கப்பூரில் இலங்கையர்கள் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தொழிலாளர் சந்தையில் நிலவும் ஆளணி வளப் பற்றாக்குறையை நீக்கும் வகையில், அந்நாட்டு அரசு தனது பணிக்கான அனுமதி திட்டத்தில் பெரும் தளர்வுகளை அறிவித்துள்ளது. உணவகம், சமூகச் சேவை மற்றும் விமான போக்குவரத்து ஆகிய 8 புதிய தொழிற்துறைகளில் பணிபுரியும் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சு இது தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பாரம்பரியமற்ற ஆதார நாடுகளுக்கான தொழிற்பட்டியலில் இந்த 8 புதிய பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
1. இறைச்சி மற்றும் மீன் வெட்டுபவர்கள் / உணவுப் பதப்படுத்துநர்கள்
2. உணவு மற்றும் பான நிலைய உதவியாளர்கள்
3. சமையலறை உதவியாளர்கள்
4. உணவகப் பணியாளர்கள்
5. விமானப் பணிப்பெண்கள் / விமானப் பணியாளர்கள்
6. குழந்தைகள் பராமரிப்பாளர்கள்
7. குழந்தைப் பருவக் கல்வியாளர்கள்
8. ஆசிரியர் உதவியாளர்கள்
9. இத்திட்டத்தின் கீழ் பணியாளர்களைச் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
இலங்கையுடன் பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்.
இந்த தொழிற்பட்டியலின் கீழ் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அவர்களுக்குக் குறைந்தபட்சம் மாதம் 2,000 சிங்கப்பூர் டொலர் நிலையான சம்பளமாக வழங்க வேண்டும்.
உள்ளூர்வாசிகளுக்கு போதிய ஆர்வம் இல்லாத அல்லது ஆட்கள் பற்றாக்குறை நிலவும் துறைகளுக்கு உதவவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள முதலாளிகள் அல்லது நிறுவனங்கள் உரிய தகுதிநிலைகளைப் பூர்த்தி செய்து, அரசாங்கத்தின் முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே இலங்கையர்களைப் பணிக்கு அமர்த்த முடியும்.
சிங்கப்பூரில் குழந்தை பராமரிப்பு, விருந்தோம்பல், உணவகம் மற்றும் விமானத் துறைகளில் பணியாற்ற விரும்பும் இலங்கை இளைஞர்களுக்கு இதுவொரு சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.