தமிழ் இனத்தை தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம்!செல்வம் அடைக்கலநாதன்
வடக்கு, கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது பாகுபாடு பாராமல் சித்திரவதை செய்து அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,வடக்கு கிழக்கிலே எங்கு தோண்டினாலும் தமிழ் மக்களின் எச்சங்கள் காணப்படுவது சர்வ சாதாரணமாகப் போய்விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கும், இனப் படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்று (04) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கிலே மன்னார் முல்லைத்தீவ யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இந்த மனித எச்சஙக்ள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதே போன்று கிழக்கு மாகாணத்திலும் மனித உரிமை மீறல்கள் மூலம் சித்திரவைத் செய்து புதைக்கப்பட்ட இடங்கள் காணப்படுகின்றன.
அவைகள் தொடர்பிலும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் செய்ய வேண்டும். இதற்கு சர்வதேசம் அக்கறை கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கதவைத் தட்டிய எமது போராளிகளின் வீரம், பொதுமக்களின் அவலம் இன்றைக்கு பல ஆதரரங்களுடன் வலுவெடுத்திருக்கின்றது.
சர்வதேச விசாரணை
அந்த அடிப்படையில் இன்றைய எமது கையெழுத்துப் போராட்டமும் அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் முகமாக எமது மக்களின் உணர்வலைகளை இந்தக் கையெழுத்தின் ஊடாக காட்டுவதன் மூலம் இந்த மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தற்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறுகின்ற வேளையில் எமது மக்களின் இந்த ஆணை என்பது மிகவும் முக்கியமானது.
இங்கு களவெடுத்தவர்கள் களவினையும், களவெடுத்தவர்களையும் விசாரிக்க முடியாது என்ற அடிப்படையிலே எமது இனத்தை அழித்தவர்கள், அழிக்கப்பட்ட இனத்தின் பால் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதையும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.
எனவே சர்வதேச விசாரணை ஊடாக இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமதும், எமது மக்களினதும் வேண்டுகோளாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



