ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு : அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி வலியுறுத்து
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் அவலநிலையை நிவர்த்தி செய்யுமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தணி பிளிங்கனிடம் (Anthani Blinken) அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி விலி நிக்கல் (Wiley Nickel) வலியுறுத்தியுள்ளார்.
இதனை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர்கள் அண்டனி பிளிங்கனிடம் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக வாதிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையிலேயே விலி நிக்கலின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுயநிர்ணய உரிமை
ஏற்கனவே, அமெரிக்க காங்கிரஸின் (US Congress) 10 உறுப்பினர்கள், பிலிங்கனுக்கு, எழுதியிருந்த கடிதத்தில், "குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதும், ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் அமெரிக்க கோட்பாடுகளுக்கு ஏற்ப தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க உதவுவது, இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது" என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், நீடித்து வரும் பிரச்சினைக்கு அமெரிக்கா தீர்வு காண வேண்டும்.
அத்துடன் உக்ரைன்(Ukraine), கொசோவோ(Kosovo), கிழக்கு திமோர்(Timor-Leste), தெற்கு சூடான் (South Sudan) போன்றவற்றில் கவனம் செலுத்துவது போன்று சுயநிர்ணய உரிமைக்கான அமெரிக்காவின் ஆதரவு, ஈழத் தமிழர் தீர்விலும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என குறித்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் பிளிங்கனிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |