தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக அகற்ற வேண்டும்: சஜித் வலியுறுத்து
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்..
நாடாளுமன்றில் இன்றையதினம் (18.07.2023) இடம்பெற்ற சபை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''நோயாளிகளின் உயிரைப் பறித்து பணம் சம்பாதிக்கும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக அரசாங்கம் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரணம் ஏற்படுவதற்கான காரணம்
மருந்து தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, தரமற்ற மருந்துகள், நோயாளர் பராமரிப்பு பிரச்சனைகள், கவனக்குறைவு போன்ற காரணங்களால் நோயாளிகளின் உயிரிழப்புகளை நாடு முழுவதிலும் இந்த நாட்களில் நாம் அதிகம் கேள்விப்பட்டு வருகிறோம்.
மேலும், உயிரிழந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருந்துகளினால் உடனடி மரணம் ஏற்படுவதற்கான காரணங்களை உடனடியாக ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
மேலும், இலவச சுகாதார சேவையை அனுபவிக்கக்கூட அச்சப்படும் இந்நாட்டு மக்கள் உயிரிழப்புகள் குறித்து இன்னமும் மௌனமாக இருப்பது ஏன்? எனவும், நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்ததா? எனவும், இவ்வாறு கடந்த மூன்று வருடங்களில் பதிவு செய்யாமல் அவசரகால கொள்வனவுகளாக எத்தனை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன? எனவும் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் , பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
