தெஹ்ரான் கிராண்ட் பஜாரில் கடைகள் மூடல் - விலைவாசி உயர்வால் மக்கள் அவதி
ஈரானில் நடைபெற்று வரும் போர் அந்நாட்டின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக, தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கிராண்ட் பஜார் சந்தை, போரின் தாக்கத்தால் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
வழக்கமாக பாரசீகப் புத்தாண்டு காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்தச் சந்தையில், தற்போது பெரும்பாலான வணிகர்கள் தங்கள் கடைகளை மூடியுள்ளனர்.
ஈரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி
போர் காரணமாக ஈரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாலும், இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
சந்தைக்கு வரும் பொதுமக்கள், தங்களின் ஒரு மாத ஊதியத்தைக் கொண்டு ஒரு ஜோடி ஆடைகளைக் கூட வாங்க முடியாத நிலையில் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
2025இல் நிலவிய 36 சதவீத பணவீக்கத்தை விட, தற்போது போர் தொடங்கிய பின் விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது.

வான்வழித் தாக்குதல்கள்
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் சந்தைப் பகுதிகளுக்கு அருகாமையில் நிகழ்வதால், பாதுகாப்பு கருதி வியாபாரிகள் தங்கள் தொழிலைக் கைவிட்டுள்ளனர்.
வான்வழித் தாக்குதலில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதோடு, இடிபாடுகளுக்கு இடையே மக்கள் நடமாடும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. பல ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளைச் சகித்து வந்த ஈரானிய மக்களுக்கு, இந்தப் போர் தாங்க முடியாத பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.