கிண்ணியாவில் சிறுவர் பூங்காவுக்குள் கடைத் தொகுதி அமைக்க எதிர்ப்பு
திருகோணமலை, கிண்ணியா பிரதேசசபையின் பராமரிப்பின் கீழ் உள்ள சிறுவர் பூங்கா அமைந்துள்ள காணியில் கடைக்கான கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணியளவில் கொழும்பு - கிண்ணியா பிரதான வீதியின் கச்சக்கொடித்தீவு பிரதேசசபைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஐந்து சங்கங்களும், பொது மக்களும் இணைந்து நடத்தியுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இச்சிறுவர் பூங்காவில் கிண்ணியா பிரதேசசபைக்குட்பட்ட இருபது கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் இங்கே தமது பொழுது போக்கினை கழித்து வருவதாகவும், வேறு ஒரு இடம் இல்லாததனால் இக்கட்டட வேலையை நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு வந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்தினை கேட்டறிந்ததோடு அவர்களது மகஜரையும் ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.நசீர் கூறுகையில்,
இவ்விடத்தில் சிறுவர் பூங்கா இருந்த போதிலும் கடந்த காலங்களில் முன்னால் தவிசாளர்கள் ஒரு பூ மரச் செடியேனும் நாட்டுவதற்கு முயற்சி செய்யவில்லை. இவ்விடத்தில் சிறுவர் பூங்காவை அமைப்பதற்கு நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம்.
இந்த நிலையில் முன்னால் தவிசாளரும், குறிப்பிட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக் கைங்கரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சிறுவர் பூங்காவை அமைப்பதோடு கிண்ணியா பிரதேசசபைக்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய கடைத் தொகுதியினை அமைப்பதற்கு முயற்சியை மேற்கொண்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறுவர் பூங்காவிற்கான அதே இடத்தில் பின் பக்கம் மிக சிறப்பான முறையில் அமையக்கூடிய வகையில் சிறுவர் பூங்காவை அமைப்பதாக தெரிவித்ததோடு, சபைக்கு வருகின்ற வருமானத்தை தடுக்கும் நோக்கில் இவர்கள் செயல்பட்டு
வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.









