இரண்டு வார கால அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்ச
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (27) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவ்வாறு செல்ல முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி ஒருவர் மூலம் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் FCID இல் முன்னிலையாக இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (27) காலை 9.00 மணிக்கு FCID முன் வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 'சிரிலிய' என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 'நல்லாட்சி' அரசாங்கத்தின் போது முதல் முறையாக விசாரணைகள் தொடங்கப்பட்டன.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கும் நேற்று (26) குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.
நாமல் ராஜபக்ச இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், நேற்று காலை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.