கைது செய்யப்பட்ட ஷிரந்தி! பழியை புலம்பெயர் தமிழர்கள் மீது சுமத்தும் சரத் வீரசேகர
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துனைவியார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச இன்று காலை கிருலப்பனையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், இந்த கைது விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தேசிய மக்கள் அரசாங்கத்தின் மீது தனது கடுமையான விமர்சனங்களை இதன்போது முன்வைத்தார்.
பொய்யான குற்றச்சாட்டுக்கள்
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டமை குறித்து எமது வலுவான கண்டனங்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த நாட்டில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று, நாட்டை மிகப்பெரிய அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்ற, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவிக்கும், மகனுக்கும் தொடர்ந்து துன்புறுத்தல்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்மூலம், தீவிரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் திருப்திபடுத்துதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதுபோன்ற இடையூறுகளை தொடர்ந்து முன்னெடுக்க இந்த அரசாங்கத்தை நாம் அனுமதிக்க முடியாது. விரைவில் மக்கள் எதிர்ப்பு அலை ஒன்று உருவாகும் என்பதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஷிரந்தி ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுமையாகவே பொய்யானவை என்பதை நாங்கள் அறிவோம்.

இத்தகையை குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்து துன்புறுத்துவதன் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இல்லை.
தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் அமைப்புக்களுக்கு இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.