ஹெரோயின் போதைப்பொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
கடந்த வாரம் இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 250 கிலோ ஹெரோயின் அடங்கிய கப்பலை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் ஆகியன இன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடச்செய்தன.
இந்த கப்பல் கைப்பற்றப்பட்டபோது அதில் இருந்த ஆறு பாகிஸ்தானிய கடத்தல்காரர்களும் ஒரு ஈரானிய கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஏற்கனவே விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வருகை தந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் பல நாட்கள் தொடர் கண்காணிப்பின் பின்னர் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டது.
கப்பலில் இருந்து 09 உறைகளில் இருந்து 225 போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு மாத்திரம் இலங்கையின் கடற்படையினர் 13.16 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.