இலங்கை கடற்பரப்பில் இருந்த கப்பல்: சீனாவின் இறுதி முடிவு
இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய கப்பலான ஹிப்போ ஸ்பிரிட் (HIPPO SPIRIT) கப்பல், தற்போது சிங்கப்பூர் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
மத்தியஸ்தம் செய்வது மற்றும் மாதிரிகளை வழங்கும் நோக்கில் இந்த கப்பல் சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதாக செயற்கை உரத்தை இலங்கைக்கு அனுப்பிய சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல்மார்க்கத்தை வெளியிடும் இணையத்தளங்களின் தரவுகளில், எதிர்வரும் 10ம் திகதி இந்த கப்பல் சிங்கப்பூரைச் சென்றடையும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 70 நாட்களாக நிலை கொண்டிருந்த இந்த கப்பல், கடந்த 4ம் திகதி சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
சீன உர நிறுவனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சீன தூதர், கடிதமொன்றின் ஊடாக தமக்கு அறிவித்துள்ளதாகவும், அத்துடன் இலங்கை உர நிறுவனம், சீன உர நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக இது குறித்த அறிவித்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீள சீனா நோக்கி பயணிக்கவில்லை எனவும், இலங்கை கடல் எல்லைக்குள்ளேயே இருந்துள்ளதாகவும் சர்வதேச கடல்சார் தரவுகள் வழி அறிய முடிகின்றது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமக்கு ஏற்பட்ட நட்டத்திற்காக சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம், மத்தியஸ்த சபையின் ஊடாக 8 மில்லியன் டொலர் நட்ட ஈட்டை இலங்கை வரையறுக்கப்பட்ட வணிக உர நிறுவனத்திடமிருந்து  கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.             
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        