இந்தியாவின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை விரையும் ஷி யான் 6
இந்தியாவின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக்கப்பலானது இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனக்கப்பலின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உலக தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனக்கப்பலுக்கான அனுமதி குறித்த தகவலொன்றை வெளியிட்டிருந்தார்.
சீன கப்பல் விவகாரம்
இந்நிலையில் அலி சப்ரி ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையை மேற்கோள் காட்டி, சீனக் கப்பலான ஷி யான் 6 இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கமைய சீன கப்பல் விவகாரம் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், இலங்கையின் நிலையான செயற்பாட்டு நடைமுறைகளுக்கு அமைய கப்பல் செயற்பட்டால், பிரச்சினை ஏதும் ஏற்படாது எனவும் சப்ரி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷி யான் 6 சீனக் கப்பல், செப்டம்பர் 23 அன்று மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்த நிலையில், செப்டம்பர் 14 அன்று அதன் சொந்த துறைமுகமான குவாங்சோவை விட்டு வெளியேறிய பின்னர் செப்டம்பர் 14 சிங்கப்பூரில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.