முறையாக ஹிஜாப் அணியாத மாணவிகள்: ஆசிரியர் மேற்கொண்ட நடவடிக்கையினால் சர்ச்சை
இந்தோனேசியாவில் ஹிஜாப் சரியாக அணியாத மாணவிகளுக்கு ஆசிரியர் மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான கிழக்கு ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரில் உயர்நிலைப் பாடசாலை இயங்கி வருகின்றது.
இந்த பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் 14 பேர் ஹிஜாப் சரியாக அணியாமல் சென்றதற்காக, அவர்கள் தலையில் உள்ள பாதி முடியை ஆசிரியர் ஒருவர் மொட்டை அடித்துள்ளார்.
மன்னிப்பு கோரிய பாடசாலை நிர்வாகம்
இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளின் பெற்றோர்களிடம் பாடசாலை நிர்வாகம் மன்னிப்பு கேட்டதுடன், மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும், முந்தைய காலங்களில் இந்த பாடசாலையில் படித்த மாணவிகள் ஹிஜாப் அணிய மறுத்ததால், பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தோனேசியா கல்வித்துறை உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
