யாரும் அழ வேண்டாம் என்ற தங்கை! மகனின் உடலை கண்டு கதறி அழும் தாய்
செய்யாத குற்றத்திற்கு ஒரு குடும்பமே தண்டனை அனுபவிக்கும் வரலாறு யாழில் பதிவாகியுள்ளது.
சிறையில் சாந்தன் அனுபவித்த ஆயுள் தண்டனையை இனி தமது ஆயுள் முழுவதும் அந்த குடும்பம் அனுபவிக்கும் அவலநிலை உருவாகிவிட்டது.
கடைசி ஆசை
பெரும் குற்றங்களை இழைத்த தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை நிராசையாக போவது அரிதான விடயமாக இருக்கும் போது ஒரு குடும்பமே சாந்தனின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தில் வாழும் நிலை உருவாகிவிட்டது.
சாந்தன் தனது தாயை பார்க்க வேண்டும் என்று அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசாங்கம் என தன்னால் இயன்றவரை அனைவரிடமும் மன்றாடி தோற்றுவிட்டார். மனிதர்களை நம்பி ஏமாறுவது புதியவிடயமல்ல ஆனால் கோவிலே உறைவிடம் கடவுளே கதி என்று இருந்த சாந்தனின் தாயாரும் தோற்றுவிட்டார் என்றால் பாவப்பட்ட இந்த தமிழினம் யாரை நம்பி இன்னும் நீதிக்காக போராடுகின்றது?
''சாந்தன் விடுதலையான பின்னரும் 15 மாதங்கள் காத்திருக்கிறேன் மகன் இன்று வருவார் நாளை வருவார் என்று, ஆனால் மகன் வருவார் என்று எனக்கு இனியும் நம்பிக்கை இல்லை.
கோவிலடியில் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் சிரித்துக்கொண்டு என்னிடம் வந்து மகன் வரப்போகிறார் என கூறுகிறார்கள்.அப்படி என் மகனை நான் பார்த்துவிட்டால் அது கடவுள் செயல் என்றே சொல்வேன்.'' என்று சாந்தனின் தாயார் கூறியிருந்தார்.
சாந்தன் தேருக்கு வரக்கூடும்
இதை பார்க்கும் போது அவர் மகன் வருவார் என்று காத்திருந்து ஏமாந்து கடைசியில் வந்தால் பார்ப்போம் என்ற மனநிலையில் விரக்தியுடன் பேசுவதாக தோன்றினாலும், அவரின் இறுதி வார்த்தைகள் மனதை கணமாக்கிவிட்டன.
''இன்று கோவிலில் கொடியேற்றம்,நான் வீட்டிலிருந்தே வழிபடுகிறேன் ஏனென்றால் நாளைக்கு தேர் சாந்தன் தேருக்கு வரக்கூடும்'' என கூறியிருந்தார்.
ஆசைகள் நிராசையாக போய்விடுமோ என்ற அச்சத்தில் தனது எண்ணங்களுடன் போராடிய தாயாருக்கு இறுதியில் அவரின் அச்சமே வெல்லும் வகையில் சாந்தன் வெறும் உடலமாகவே வீட்டிற்கு சென்றார்.
சுமார் 30 வருடகால பிராத்தனைகள், அச்சம் கலந்த நம்பிக்கை, அத்தனை ஆசைகள்,கனவுகள்,ஏக்கங்கள் அனைத்தும் உயிரற்ற உடலாக சாந்தனை பார்த்த போது கதறி அழுந்த தாயின் கண்ணீரில் வெளிப்பட்டது.
இன்னும் எத்தனையோ தாய்மார் சாந்தனின் தாயை போன்று போரில் தொலைத்த தமது பிள்ளைகளை ஒருமுறையாவது பார்க்கமாட்டோமா என ஏங்குகின்றனர் அவர்களின் ஆசையாவது நிறைவேறுமா?