இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க இதுவே வழி! அமெரிக்காவிலுள்ள தமிழ் பொருளாதார நிபுணர் தகவல்
“நான் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்திருந்தால், தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என்று பரிந்துரையை அரசாங்கத்துக்கு வழங்கயிருப்பேன்” என்று இலங்கையில் பிறந்த பொருளாதார நிபுணர் கலாநிதி சாந்தயனன் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
ஆசிய, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் முன்னாள் பிரதம பொருளாதார நிபுணராக செயற்பட்ட இவர் இப்போது அமெரிக்காவில் உள்ள ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவி வகிக்கிறார்
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அவர் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தற்போதைய நிலையில் இருந்து மீள, இலங்கை அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மேற்கொண்டால், அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன், கடன் வழங்குநர்களை ஒன்றிணைத்து கடன்களை , மறுபரிசீலனை செய்யவும், சில சந்தர்ப்பங்களில் இலங்கை செலுத்தக்கூடிய நிலைக்கு குறைக்கவும் ஒரு திட்டத்தை உருவாக்கமுடியும்.
அதேநேரம் இந்த கடன் மறுசீரமைப்புக்கு சுமார் ஆறு மாதங்கள் எடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், கடன் மறுசீரமைப்பு நடந்து முடிந்தவுடன், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தை பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் சாந்தயனன் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டு காரணங்களுக்காக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது.
நாட்டின் பயன்படுத்தக்கூடிய அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று ரீதியாக குறைந்திருக்கிறது.
2022 ஜனவரி இறுதியில் இது சுமார் $800 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் அடுத்த சில மாதங்களில் கடன் சேவைத் தொகை $2 பில்லியனாகவும், ஆண்டு முழுவதும் $6.9 பில்லியனாகவும் இருக்கும்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியின் யதார்த்தமான கணிப்புகளை நோக்கும்போது, அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்த போதுமான பணத்தை கொண்டிருக்காத நிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 இல் லெபனானில் இதேபோன்ற நிலையே ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாடு இறக்குமதியை மிக அதிகமாக குறைக்கவேண்டியிருந்தது,
ஒரு வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் சரிந்தது, பணவீக்கம் 150 சதவீதத்தை எட்டியது, நாணயப் பெறுமதி 130 சதவீதம் சரிந்தது.
இந்தநிலையில் கடுமையான பொருளாதார நிலைமைகள் வீதிகளில் வன்முறைகளுக்கு வழிவகுத்தன,
அத்துடன் லெபனானின் குழுவாத மோதல்களுக்கும் வழிவகுத்தன என்றும் நிபுணர் சாந்தயனன் தேவராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நிபுணர் சாந்தயனன் தேவராஜன் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.




