அரசியல் கைதி மீதான தாக்குதல் விவகாரம்: நீதியமைச்சரை சாடும் சாணக்கியன்
அரசியல் கைதி மெகசீன் சிறைச்சாலையில் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சிறைச்சாலைகள் நீதியமைச்சரின் கவலையீனமே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட கிளையின் நிர்வாக கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசியல் கைதிகள் பட்டியல்
சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியில் உள்ளது. அதில் உள்ள ஒரு சிலரை அரசாங்கம் அவர்கள் அரசியல் கைதிகளாக உள்வாங்கவில்லை. பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிலரை அரசியல் கைதிகளாக உள்வாங்காமல் வேறுவிதமாக கூறுகின்றனர்.
கடந்த வாரம் மொரிஸ் என்று அழைக்கப்படும் சிறைக்கைதி மெகசீன் சிறைச்சாலையில் தாக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்.
கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் என்பவர்கள் இந்த மெகசீன் சிறைச்சாலையில் தனிப்பிரிவு ஒன்றிலேயே வைக்கப்பட்டிருந்தார்கள்.
பாதுகாப்பு இல்லாத நிலை
தற்போது வேறுவேறு குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களையும் அந்த பிரிவிலேயே தடுத்துவைக்கின்றனர்.
அங்கிருந்த சிறைக்கைதிகள் இணைந்து இந்த மொரீஸ் என்பவரை தாக்கியுள்ளனர். இது கவலையான விடயம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மெகசீன் சிறைச்சாலைக்கு சென்று அவருடைய நலன் தொடர்பில் அறிய இருக்கின்றேன்.
சிறைச்சாலையில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளது. இது சிறைச்சாலைகள் நீதியமைச்சர் என்ற வகையில் அவரது கவலையீனமும் உள்ளது என இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |