ஷான் விஜயலால் டி சில்வாவின் பிரத்தியேக செயலாளர் கைது - சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் பிரத்யேக செயலாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(15.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு 16.5 மில்லியன் ரூபா நிதி நஷ்டத்தை ஏற்படுத்தியதன், ஊடாக ஊழல் குற்றச்சாட்டினைப் புரிந்துள்ளார் என்ற அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு
தென் மாகாண முதலமைச்சின் கீழ் இயங்கும் தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தென் மாகாண பொதுத் தன்னார்வ சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்குவதற்காக, உரிய கொள்முதல் வழிமுறைகளை மீறி உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் தெரிவு செய்து அந்த நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட 16,361 நாற்காலிகளைத் தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகள் அல்லது அலுவலகங்களுக்குப் போக்குவரத்துச் செய்து ஒப்படைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.