இந்தியாவில் குடிநீர் குழாயில் கலந்த கழிவுநீர்: அதிகாரிகள் வெளியிட்ட காரணம்
இந்தியாவின் தூய்மையான நகரம் எனப்படும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், குழாய் மூலம் விநியோகிக்கப்பட்ட அசுத்தமான குடிநீரை அருந்தியதால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு பாதிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பாகீரத்புரா (Bhagirathpura) பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததே இந்த பாதிப்புக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அசுத்தமான நீரை குடித்த ஐந்து மாத குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீராத வயிற்றுப்போக்கு பாதிப்பு
அந்த பச்சிளம் குழந்தைக்கு பசும்பாலை நீர்க்க செய்வதற்காக காய்ச்சி வடிகட்டிய குழாய் நீரை சேர்த்ததே மரணத்திற்கு வழிவகுத்ததாக குழந்தையின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த தீராத வயிற்றுப்போக்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. முதல்வர் மோகன் யாதவ் இதுவரை 4 மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளார்;
எனினும், உள்ளூர் ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு 14 ஆக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். தற்போது சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகீரத்புரா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2,450 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தம்
குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் இரண்டு மாதங்களாக முறைப்பாடு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தச் சம்பவம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) கடும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குழாய் கசிவு சரிசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அலட்சியமாகச் செயல்பட்டதாக கூறி நகராட்சி அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது அப்பகுதி மக்களுக்கு லொரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை குழாய் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு மறைப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ Cineulagam