இலங்கையை மோசமாக தாக்கிய வானிலை - பதிவாகியுள்ள பலி மற்றும் சேதவிபரங்கள்
சீரற்ற வானிலை மற்றும் 'ஒர்னாப்' (Ornab) புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி முதல் இன்று (31) காலை 06.00 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அனர்த்த நிலைமை காரணமாக மூவர் உயிரிழப்பு
இதன்படி, சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 136 பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட 5,768 குடும்பங்களை சேர்ந்த 21,240 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்த நிலைமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் அறுவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் 08 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தால் அதிகளவானோர் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 நபர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பலி மற்றும் சேதவிபரங்கள்
இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு மரணமும் இருவர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், 101 வீடுகளுக்குச் சேதமும் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவதாக அதிகளவானோர் புத்தளம் மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 நபர்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மாவட்டத்தில் ஒரு மரணமும் இருவர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, அதிகளவிலான வீட்டுச் சேதங்கள் மாத்தறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு 113 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு முழுமையான வீடு சேதமும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.