வறட்சியால் மீன்கள் இறந்ததாகப் பேசப்பட்ட செய்தி பொய்யானது: சங்கீதன் (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக எந்த ஒரு குளத்திலும் மீன்கள் இறக்கவில்லை என்றும் அண்மையில் மல்லாவி குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் இறந்ததாகப் பேசப்பட்ட செய்தி முற்றிலும் பொய்யாது எனவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்ட உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் சங்கீதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள நீரியல் வள திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, மல்லாவி குளத்தில் மீன் குஞ்சுகள் இதுவரையில் விடப்படவில்லை. அக்குளத்தில் உள்ள மீன் இனங்கள் கால்வாயின் ஊடாக வெளியேறி இறந்துள்ளது. எந்த ஒரு குளத்திலும் நன்னீர் மீன்களுக்கான நோய்கள் ஏற்படவில்லை.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்
மேலும், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் மீனவ சங்கத்தின் ஊடாக பதிவு செய்திருத்தல் வேண்டும்.
அப்படி இதுவரை காலமும் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக நன்னீர் மீனவர் சங்கத்தில் தமது பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், தமது பகுதிகளில் உள்ள குளங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறுவதைக் கண்டால் உடனடியாக நீரியல் திணைக்களத்தினருக்கு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




