லண்டன் - ஹீத்ரோ விமான நிலையத்தில் கடும் நெருக்கடி! - பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம்
லண்டன் - ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பரபரப்பான வார இறுதி நாளில், ஹீத்ரோ விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமான நிலையத்தின் மின் வாயில்கள் செயலிழந்துள்ளதாகவும், ஒரு அதிகாரி மட்டுமே கடவுச் சீட்டுகளை சரிபார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பயணிகள் முன்பதிவு செய்திருந்த வாடகை கார்களை தவறவிட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரபரப்பான வார இறுதி இரண்டு நாட்களில் ஹீத்ரோ விமான நிலையத்தில் சுமார் 128,000 பயணிகளை கையாள முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
எனினும், இந்த எண்ணிக்கை கோவிட் தொற்றுக்கு முன்னர் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இப்போது பல பிரபலமான ஐரோப்பிய சுற்றுலா தளங்கள் பச்சை மற்றும் அம்பர் பட்டியல்களில் உள்ளன,
தொற்றுநோய் காரணமாக பல மாதங்களாக வெளிநாடு செல்ல முடியாமல் இருந்த மக்கள் தற்போது வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டியுள்ளனர்.
அந்த வகையில், மான்செஸ்டர் விமான நிலையங்கள் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை 958 விமானங்களையும், லண்டன் ஸ்டான்ஸ்டெட் 1,330 விமானங்களையும், கேட்விக் வார இறுதியில் 260 விமானங்களையும் எதிர்பார்க்கின்றன,
எவ்வாறாயினும், பயணிகள் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திலும் தாமதத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பயணிகள் சுமூகமாக பயணங்களை மேற்கொள்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஹீத்ரோ விமான நிலைய தலைமை நிர்வாகி ஜான் ஹாலண்ட்-கேய் தெரிவித்துள்ளார்.