பல பாடசாலைகளுக்கு திடீரென விடுமுறை! வெளியான விபரம்
நாட்டின் சில பகுதிகளிலுள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கு இன்று (15.05.2023) திடீரென விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழையினால் பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனவே மொரவக்க கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொரவக்க மற்றும் கொட்டபொல பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக மொரவக்க (தெனிய) வலய அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும் மூடப்படும் பாடசாலைகள்
அனர்த்த நிலைமை காரணமாக மொரவக கல்வி வலயத்துக்கு (தெனிய) உட்பட்ட பஸ்கொட பிரதேசத்தில் ஊருபொக்க தேசிய பாடசாலை மற்றும் பட்டிவெல கனிது விதுஹல தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்படும் என மொரவக்க (தெனிய) வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.
முலட்டியான கல்வி வலயத்தின் திஹாகொட பிரிவுக்கு உட்பட்ட கிடலாகம கிழக்கு மற்றும் மேற்கு பாடசாலைகளும் இன்று மூடப்படும் என முலட்டியானா வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் அக்குரஸ்ஸ கல்வி பிராந்தியத்தின் அக்குரஸ்ஸ மற்றும் மாலிம்பட பிரிவுகளுக்கு உட்பட்ட தியலபே கனிது கல்லூரி, அதுரலிய மகா வித்தியாலயம், பஹுரன்வில கனிது கல்லூரி மற்றும் பரடுவ கனிது கல்லூரி ஆகியவையும் இன்று மூடப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |