ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு சட்டமூலத்தின் அரசியலமைப்பு தன்மைக்கு எதிராக உயர் நீதிமன்றில் பல மனுக்கள்
முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு, அதற்கு எதிராகப் பல விசேட தீர்மான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதுடன், சந்தேகநபர்களின் நியாயமான விசாரணைக்கான உரிமையைப் பறிப்பதாகவும், சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குவதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பு (Law and Society Trust - LST) தாக்கல் செய்துள்ள மனுவில், குறித்த சட்டமூலம் முழுமையாகவோ அல்லது அதன் சில பிரிவுகளோ அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்மானிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மக்கள் கருத்துக்கணிப்பு
அத்துடன், இதனைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் என்ற பதத்திற்கு தெளிவான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. - கடுமையான குற்றங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு விரிவான கைது மற்றும் விசாரணை அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தும்போது பிணை வழங்குதல் மற்றும் கைது காரணங்களை ஆராய்தல் தொடர்பில் நீதவான்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன.
பொலிஸாரிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் கவலைக்குரியவை. - வாடிக்கையாளர்களின் இரகசியத் தகவல்களைப் பாதுகாக்கும் சட்டத்தரணிகளின் தொழில்சார் கடமைகள் குற்றவியல் பொறுப்புக்கு உள்ளாகக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்க அனுமதிக்கப்படும் நிலை - கட்டுப்பாட்டு உத்தரவுகள்: தனிநபர்களின் நடமாட்டம் மற்றும் தொடர்பாடல் சுதந்திரங்கள் காலவரையின்றிக் கட்டுப்படுத்தப்படக்கூடும் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பை மீறும் அபாயத்தையும் ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சட்டமூலம் 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், ஒக்டோபர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.