யார் இந்த காவி உடைக்காரர்! ஆதாரங்களுடன் வெளியான புதிய அதிர்ச்சித் தகவல்
சிறையில் உள்ள ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, காவி உடைக்கு மதிப்பளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் புதிய பாதயாத்திரை தொடர்பில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் இருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரையில் பௌத்த துறவி வேடத்தில் ஒருவர் பங்கேற்றிருந்தார்.
இந்தநிலையில், குறித்த நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த அம்பலாங்கொடை முன்னாள் நகரசபை உறுப்பினர் கிரேஷன் கெரமினியே என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியிருந்தன.
எனினும், பாதயாத்திரையில் பங்கேற்றவர் தான் அல்ல என கிரேஷன் கெரமினியே ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் காணொளியொன்றும் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள நபர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் தொடர்புடைய அரசியல் செயற்பாட்டாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் 'தோகொட கந்தே போதிதம்ம' என்ற பெயருடன் தொடர்புபடுத்தி ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், குறித்த பாதயாத்திரையின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எனினும், ஆவணங்களில் குறிப்பிடப்படும் நபரும் பாதயாத்திரையில் பங்கேற்றவரும் ஒருவரே என்பது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், பாதயாத்திரைக் குழுவினர் பிலிமத்தலாவை பகுதியைக் கடந்து கொழும்பு நோக்கிப் பயணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.