நாடாளவிய ரீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒரே இரவில் கைது
நாடாளவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு விசேட சுற்றிவளைப்பு நேற்று மேற்கொள்ளப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார், சிறப்பு அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 6500இற்கு மேற்பட்ட பாதுபாப்பு தரப்பினர் ஈடுபட்டனர்.
திடீர் சுற்றிவளைப்பு
தேடுதல் நடவடிக்கையின் போது, 24,281 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 10,175 வாகனங்கள் மற்றும் 7,240 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதன்போது போதைப்பொருள் குற்றங்களுக்காக 1,455 பேர் கைது செய்யப்பட்டனர், இதில் 374 கிராம் 336 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 218 கிராம் 281 மில்லிகிராம் ஹெராயின் அடங்கும்.
பிடியாணை
இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 408 பேரும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



