செம்மணிப் புதைகுழியில் பிரேத பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட சடலம் அடையாளம்
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியான தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து சட்ட ரீதியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம்
அதில் ஒரு பகுதியில் நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த ஜூலை 2ஆம் திகதி ஆரம்பமாகின.
மேலும் அந்தப் பகுதி "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு" என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து சட்ட ரீதியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டது.
அந்தச் சடலம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது என்பதைச் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் அடிப்படையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அது மீளவும் மண் போட்டுப் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது.
தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



