மீட்கப்பட்ட ஏழு இலங்கை மாணவர்கள் தொடர்பில் உக்ரைனிய அரசாங்கத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
ரஸ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவக் கல்லூரியின் ஏழு இலங்கை மாணவர்கள் தொடர்பான செய்தியின் உண்மைத்தன்மையைக் கண்டறியுமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உக்ரைனிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அது தொடர்பான மேலதிக தகவல்களை முன்னுரிமையின் அடிப்படையில் வழங்குமாறும் வெளிவிவகார அமைச்சு உக்ரைனிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இலங்கை பிரஜைகள்
உக்ரைனில் உள்ள இலங்கை பிரஜைகளின் நலனை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம்
குறித்தும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், புதுடில்லியில் உள்ள உக்ரைன் தூதரகத்தின் மூலமாகவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உக்ரைனிய அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறது.
உக்ரைனில் கடந்த பெப்ரவரியில் ஏற்பட்ட போர் சூழ்நிலையை அடுத்து, அங்கிருந்து
16 மாணவர்கள் உட்பட 90க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடந்த ஜூன் மாதம் வரை
வரவழைக்கப்பட்டனர் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.