பிரதமரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட போது பிரதேசத்தில் மின் துண்டிப்பு:விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கொள்ளுப்பிட்டி 5வது ஒழுங்கையில் அமைந்துள்ள பிரதமரின் வீட்டுக்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவைக்கப்பட்ட பிரதமரின் வீட்டை அரச இரசாயன பகுப்பாய்வாளர் இன்று ஆய்வு செய்துள்ளார்.
திட்டமிடப்படாத மின் துண்டிப்பு

இதனிடையே ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பாகவும் சிறப்பு விசாரணை நடத்தப்படுவதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று மாலை 6 மணிக்கு பின்னர் மின்சாரத்தை துண்டிப்பதற்கான திட்டங்கள் இருக்கவில்லை என்பதுடன் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது சிக்கலுக்குரியது எனவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.