தமிழகத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திய நிகழ்வில் பெரும் குழப்பம் (VIDEO)
இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திய அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது ஏற்பாட்டுக்குழுவினருக்கும் தமிழக காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த நிகழ்வு உடனடியாக திராவிடர் விடுதலை இயக்க அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது திராவிடர் விடுதலை இயக்க அலுவலகத்திற்கு திடீரென நுழைந்து காவல்துறையினர் நிகழ்வினை நிறுத்துமாறு அறிவித்துள்ளனர்.
இதன்போது ஏற்பாட்டுக்குழுவினருக்கும் தமிழக காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், தனது அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வினை தமிழ்நாட்டில் சென்னை நகரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்துகின்றது.
கோவிட் பொது முடக்கத்திற்குப் பின்னராக நடைபெறுகின்ற நேரடி பொதுநிகழ்வாக இது
அமைவதோடு, மூன்றாவது தவணைக்காலத்தின் ஏழாவது அமர்வாக இந்நிகழ்வு இன்று இடம்பெறுகின்றது.
அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் என பேராளர்கள் பலரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வில் 'ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு', 'இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்' ஆகிய தொனிப்பொருட்களில் கருத்தமர்வுகள் இடம்பெறுகின்றன.
மூத்த ஊடகர் அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் பாமரன், பேராசிரியர் ஹாஜா கனி, மூத்த ஊடகர் தோழர் தெ.சி.சு.மணி, முனைவர் பேராசிரியர் நாகநாதன், முனைவர் பேராசிரியர் மணிவண்ணன், தோழர் ச.அ.சௌரிராசன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.
கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற இருக்கின்றன. மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துரை வழங்க, மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி சிறப்புரை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தலைமையுரையினை வழங்குகின்றார். இந்திய நேரம் மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்ற இந்நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியாகவும் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/284b1328-e2c1-4811-a908-412457c1eb29/22-6288a9ea0283e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/efe6b416-0262-4eb2-9177-ffc3f8599a3a/22-6288b94fe26c6.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)