அநுர தலைமையில் அடுத்த மாதம் ஒன்றுகூடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்றை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இக்கூட்டத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவும் கலந்துகொண்டுள்ளார்.
தீர்மானம்
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இதுபோன்ற கட்டமைப்புக்கள் அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறான கட்டமைப்புக்களைத் தற்பொழுது உருவாக்க வேண்டாம் என்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் காணப்படும் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்ற வகையில் அக்கட்டமைப்புக்களை உருவாக்கி பராமரிக்கப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் தொலைபேசி சமிக்ஜைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
கிரமாத்திற்குத் தொடர்பாடல் என்ற திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 50 புதிய தொடர்பாடல் கோபுரங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும், இதன் ஊடாக இந்த பிரச்சினையைக் குறிப்பிட்டளவு தீர்க்க முடியும் என்றும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் க்ரிப்டோ பணத்தின் (crypto) பயன்பாடு குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கைக்குள் அவற்றின் பயன்பாட்டுக்கு இடமளிப்பதா இல்லையா என்பதை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இங்கு டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருக்கும் பகுதிகள் குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
புதிய தொழில்நுட்பங்கள்
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டின் முன்னணியாளரான ICTA நிறுவனத்தை டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையின் கீழ் கொண்டுவந்து, வினைத்திறனான முறையில் அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அரசாங்க நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களைப் பயன்படுத்தி அவற்றின் ஊடாக தங்கள் தரவுகளையும், தகவல்களையும் சேகரிப்பதற்கு வெவ்வேறுபட்ட தளங்களை உருவாக்கியிருப்பதாகவும், அவற்றை எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில், இலங்கை பிரஜைகளின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாள்வது மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களின் சம்பளங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.