கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்! முக்கிய சிறைச்சாலைகளில் களமிறங்கிய புலனாய்வாளர்கள்
புதிய இணைப்பு
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் முக்கிய சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் காரணமாக பதுளை சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் மோதல்கள் காரணமாக மஹர சிறையிலிருந்து கொண்டுவரப்பட்ட பத்து கைதிகளும் பதுளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், புலனாய்வு அதிகாரிகள் 24 மணி நேரமும் காவலில் உள்ளனர் என்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் தொடர் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர் சிறை மோதல்கள்...
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மெகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நீர்கொழும்பு, மஹர உள்ளிட்ட சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தம் 5 சிறைச்சாலைகளில் இதுபோன்ற கலவரங்கள் ஏற்பட்டு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலைகளில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்த ஒரு தரப்பு தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில தினங்களுக்குள்ளாக கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 3 சிறைச்சாலைகளில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை தடுக்கும் நோக்குடன் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளினது பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.