சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால், கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான சேபால் அமரசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று (31) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வுத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகை
இலங்கை உட்பட உலக பௌத்த மக்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் தலதா மாளிகை மற்றும் அங்குள்ள உள்ள புத்தரின் புனித தந்தத்தை அவமதிக்கும் வகையில் சேபால் அமரசிங்க தனது வலையொளி (யூ டியூப்) ஊடகம் மூலம் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பௌத்த மாநாயக்கர்கள் உட்பட பல தரப்பினர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
சேபால் அமரசிங்க, சமூக ஊடகங்களில் ராஜபக்சவினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசியல்வாதிகள் மற்றும் சில பௌத்த தேரர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.