இருதய நோயாளிகளின் உயிர்கள் காக்க செந்தில் குமரன் நிவாரண அமைப்பின் மாபெரும் இசை நிகழ்ச்சி MGR 110
இந்த வருடம் பொதுமக்களிடம் நிதி திரட்டும் நோக்கில், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயரில் மாபெரும் இசை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நாளை (06.11.2026) கனடாவின் ஸ்கார்பிரோ பகுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்காசிறி, தமிழ்வின் மற்றும் IBC தமிழ் ஆகிய பிரதான ஊடகங்களின் அனுசரணையுடன், துள்ளர் நிவாரண அமைப்பின் ஸ்தாபகரும் பாடகருமான செந்தில் குமரனின் பங்கேற்பில் இந்த பிரமாண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிகழ்வுகள் மூலம் செந்தில் குமரனுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
வெற்றிகரமாக நடத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள்
தமது சொந்த செலவில் இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, அவற்றின் மூலம் கிடைக்கும் நிதி தொடர்பான கணக்குகளை சமூக ஊடகங்கள் வழியாக வெளிப்படையாக அறியத் தருவதுடன், திரட்டப்படும் நிதியை உரிய தேவையுடையோருக்கு வழங்கி வருவது மக்கள் மத்தியில் அவருக்கு தனித்துவமான இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்வில் டொரோண்டோவின் முன்னணி இசைக் குழுவான Lathan Brothers பின்னணி இசை வழங்கவுள்ளது.
அத்துடன், பல திறமையான பாடகர்களும் இதில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு கனடாவை தளமாகக் கொண்டு, இலங்கையின் தமிழ் பகுதிகளில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஏழை நோயாளிகளுக்கான இலவச இருதய சத்திரசிகிச்சைகளை மருத்துவ நிபுணர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் ஒருங்கிணைத்து வருகிறது.

இந்த அமைப்பின் ஊடாக இதுவரை சுமார் 210-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முல்லைத்தீவு, மல்லாவி, மாஞ்சோலை, வவுனியா, கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
கனேடிய உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கப்பட்ட ஆறு இயந்திரங்கள்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தில் வைத்து, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஊடாக வடமாகாண வைத்தியசாலைகளுக்கு இந்த அமைப்பினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொடுத்து வழங்கிய விசேட இயந்திரத்தின் உதவியுடன், இதுவரை சுமார் 400 இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இவை மட்டுமன்றி, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நோயாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் இந்த அமைப்பு தொடர்ந்து வழங்கி வருகிறது. மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்காக இதுவரை இந்த அமைப்பினால் 1.3 மில்லியன் கனேடிய டொலர்களுக்கும் அதிகமான நிதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட இந்து ஆலயத்தை மீளக் கட்டித்தர வேண்டும்..! ஹிஸ்புல்லாவுக்கு ஈரோஸ் கட்சி வலியுறுத்தல்
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சிக்கனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை