அடுத்த சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்
சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லாத நிலையில் அவர் தற்போது பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பதியை கொண்டுவருவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்ற பின்னர் நிஹால் கலப்பதியை அப்பதவிக்கு கொண்டுவருவதே ஜே.வி.பியின் திட்டமாக இருந்ததாக கருதப்படுகிறது.
அதன் காரணமாகவே அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமல் இருந்திருக்க கூடும்.
நிஹால் கலப்பதி
மேலும் தென்மாகாண முதன்மை வேட்பாளராக அவரை களமிறக்கும் உத்தேசத்தை தேசிய மக்கள் சக்தி கொண்டிருந்த நிலையில், இறுதியில் அவர் தேசிய பட்டியல் உறுப்பினராக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான நிஹால் கலப்பதி அடுத்த சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அல்லாவிட்டால் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம்.
முன்னதாக மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போதும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போதும் சபாநாயகர்களாக செயற்பட்ட தரப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்ச ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயற்பட்டார் எனவும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது சபாநாயகராக பதவி வகித்த மகிந்த யாப்பா அபேவர்தன, தனது அலுவலகத்தை குடும்ப உறுப்பினர்கள்மூலம் நிரப்பினார் என்றும் எதிர் தரப்புகள் வாதிட்டிருந்தன.
சபாநாயகர் பதவி
மேலும், அவர்களை எதிர் தரப்புகள் ஆளுங்கட்சியின் கைப்பாவை என புனைபெயரிட்டு அழைத்தன. .ரணில் ஜனாதிபதியான பின்னரும் அரசமைப்பு பேரவையை நிறைவேற்று துறையின் ஒரு கிளையாக மாற்றும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்கூட அவர் எதிர்கொண்டிருந்தார்.
ஆனால் சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லவில்லை. அவரின் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சையால் அவர் தாமாகவே முன்வந்து பதவி விலகியுள்ளார்.
சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் அவசியமில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலே போதும். அத்துடன், அவர் கல்வித்தகைமை அற்றவர் என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
எனினும், உரிய சான்றிதழ்களை முன்வைக்க முடியாத காரணத்தால் அவர் பதவி துறந்துள்ளார். " கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனக்கு பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான தகவல்கள்
தாம் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பது உறுதியாகாதபோதிலும் சபாநாயகர் பதவியின் முக்கியத்துவம் கருதி அசோக ரன்வல பதவி விலகியுள்ளமை சிறந்த முன்னுதாரணமாகும்.
அவருக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
சிலவேளை அவர் போலியான தகவல்களை வழங்கி இருந்தால் எம்.பி. பதவியையும் துறப்பதே செய்வதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும்.
குறிப்பாக அசோக ரன்வல காலம் கடத்தவும் இல்லை, சமாளிப்பு பாணியை பின்பற்றவும் இல்லை. கட்சி அறிவித்தால் பதவி விலகுவேன் என சபாநாயகர் பதவியை கட்சிக்குரியதாக்கவும் இல்லை.
அந்தவகையில் சபாநாயகரின் முடிவு தற்போது இலங்கை அரசியல் ஆர்வளர்களின் பாராட்டை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |