இலங்கை கடற்படை கப்பல்களை செங்கடலுக்கு அனுப்ப யோசனை
யேமன் நாட்டை தளமாகக் கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களால் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பணிக்கு ஆதரவாக, இலங்கை கடற்படையின், கண்காணிப்புக் கப்பலை செங்கடலுக்கு அனுப்புவது தொடர்பில் இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.
இந்தநிலையில் கப்பலை அனுப்பப்படுவதற்கான திகதி எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கடற்படைப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடல் பகுதியில் இது போன்ற பணி சாதாரணமாதாகும், இதுபோன்ற பணிகளுக்கு முன்னர், இலங்கை தமது கப்பல்களை அனுப்பியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையிடம்; தற்போது சயுரலா, சிந்துரலா, பராக்கிரமபாகு, கஜபாகு மற்றும் விஜயபாகு என்ற ஐந்து கண்காணிப்பு கப்பல்கள் உள்ளன.
இலங்கை அரசு தயார்
இந்தநிலையில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இருந்து வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்க, செங்கடலுக்கு கடற்படைக் கப்பலை அனுப்ப இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
எனினும் அத்தகைய ஒரு கப்பலை பதினைந்து நாட்களுக்கு அனுப்ப 250 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என்றும், தாக்குதல்கள் தொடர்ந்தால் இலங்கையின் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் மோசமாக இருக்கும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆதரவு
அத்துடன் செங்கடலில் நடக்கும் எதுவும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஒருங்கிணைந்த CMF அமெரிக்க தலைமையிலான கடல் படையில் இலங்கையும் அங்கம் வகிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பஹ்ரைனைத் தலைமையிடமாகக் கொண்டு, CMF என்பது 39 நாடுகளைக் கொண்ட கூட்டணியாகும். இந்த அமைப்பு, ஆழ்கடல்களில் சட்டவிரோதமான அரச சார்பற்ற நபர்களை எதிர்கொண்டு, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்தை உள்ளடக்கிய சுமார் 3.2 மில்லியன் சதுரமைல் சர்வதேச கடல்களில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை கடமையாக கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையே போர் வெடித்ததைத் தொடர்ந்து ஈரானின் ஆதரவைப் பெற்றதாகக் கூறப்படும் ஏமனை தளமாகக் கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு இறுதியில் வணிகக் கப்பல்கள் மீது தமது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீதே, தாம் தாக்குதல் நடத்துவதாக அந்த கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |