செம்மணி புதைகுழி விவகாரம்: ஐ.நா. விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி பேரணிக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு
செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் பேரணியொன்றுக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று (09.09.2026) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன. இவ்வாறான முக்கியமான சான்றுப் பொருட்கள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது, அவை சேதப்படுத்தப்பட்டு குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்குகின்றது.

எனவே, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் தலையீடுகள் எதுவுமின்றி, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், சர்வதேச தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார் நிபுணர்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது கட்டாயமாகும்.
ஐ.நா.வின் முழுமையான பொறுப்பின் கீழ் விசாரணை
இதனைத் தொடர்ந்து, தடயங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உடனடியானதும் அவசரமானதுமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் தேசியப் பேரவையும் குடிசார் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்தப் பேரணியில், அனைத்து குடிசார் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர் கல்விச் சமூகத்தினர், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 13ஆம் திகதி பேரணி
எதிர்வரும் 2026 செப்டெம்பர் 13ஆம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
அங்கிருந்து கோவில் வீதி ஊடாக பேரணி சென்று, முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.