சட்டச் சிக்கலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை: சபையில் நன்றி தெரிவித்த செல்வம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட 8 பேரில் சட்டச் சிக்கலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று (10.11.2022) விடுதலை செய்யப்பட்டமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் ஜனாதிபதிக்கும், நீதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.
பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட எண்மரில் 4 பேர் சட்டச் சிக்கல் காரணிகளால் சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டனர்.
விரைவில் விடுதலை

இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று விடுதலை செய்யப்பட்டமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நன்றி தெரிவித்தார்.
மிகுதியாகவுள்ள ஒருவரையும் விரைவில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் அவர் வலியுறுத்தினார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக நீதி அமைச்சர் பொது வெளியில் கூறுகின்றார். அந்த எண்ணம் வரவேற்கத்தக்கதே. இதற்காக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து அந்தப் பேச்சைத் தொடங்க வேண்டும்.
எங்களுடைய தீர்வானது அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமஷ்டியாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் 100 நாள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறைமையிலான அதிகாரப் பகிர்வைத் தர வேண்டும் என்று 100 நாள் வேலைத்திட்டத்தின் இறுதி நாளில் அவர்கள் மக்கள் பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபை முறைமையை அதிகாரத்துடன் செய்ய வேண்டும்.
அரசின் நல்லிணக்கத்தின் கீழ் பொதுமன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது நல்லிணக்கத்தையே காட்டுகின்றது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கும் காலம் தாழ்த்தாது தீர்வு காணப்பட வேண்டும்
என்று கேட்டுக்கொள்கின்றேன் என கூறியுள்ளார்.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan