யாழில் சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனை!நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் நடமாடும் வியாபார நிலையங்கள் என்பன அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, கடந்த வாரம் சங்கானை, சுழிபுரம் மற்றும் அராலி ஆகிய பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுகளில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
சிறைத்தண்டனை
இதன்போது, மூன்று பாண் விற்பனை வாகனங்கள், ஒரு ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் மற்றும் சில உணவகங்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 10 வர்த்தகத் தரப்பினருக்கு எதிராகச் சங்கானை சுகாதாரப் பிரிவினரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்குகள் அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 9 தரப்பினருக்கு மொத்தம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அதேவேளை, சுழிபுரம் பகுதியில் அசுத்தமான முறையில் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 23 ஆயிரம் ரூபா பண அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.