கொழும்பில் உள்ள காணிகளை வரிச்சலுகையுடன் துறைமுக நகர நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய போகின்றனர் - ஹர்ச டி சில்வா
கொழும்பு நகரில் உள்ள வணிக ரீதியாகப் பெறுமதியான பல காணிகள் உட்பட அரச வளங்கள் பலவற்றைக் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தின் ஊடாக துறைமுக நகர ஆணைக்குழு நிர்வகிக்கும் வகையில் வழங்க அரசாங்கம் முயற்சித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
செலன்தீவா என தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச நிறுவனத்தின் கீழ் எஸ்.பி.வி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிறுவனம் ஊடாக இவ்வாறு அரச வளங்களைத் துறைமுக ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்க உள்ளனரா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது முதலீடு செய்ய முன்வருவோருக்கு தந்திரோபய அபிவிருத்தி சட்டத்தின் கீழ் அனைத்து வரிச் சலுகைகளையும் வழங்குமாறு கூறுகின்றனர்.
உதாரணமாக இலாபம் மற்றும் இலாபத்தின் அடிப்படையில் அறவிடப்படும் வரிகளை 25 ஆண்டுகளுக்கு அறவிடாமல் இருக்கலாம். இதனைத் தவிரப் பெறுமதி சேர் வரி உட்பட ஏனைய வரிச் சலுகைகளும் வழங்கப்படும்.
இந்த முதலீட்டாளர்களை இணைத்துக்கொண்டே காணிகளை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். காணிகளை விற்பனை செய்ய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது என்ன நடக்கப் போகிறது. எப்படி இந்த முதலீட்டாளர்கள் வருவார்கள்? எனவும் ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.