சீமானை கைது செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம்!
புதிய இணைப்பு
பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக முன்னிலையாகியதோடு, விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த அவர்,
“வீட்டில் பொலிஸார் சம்மன் ஒட்டியது தவறான விடயம். வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்கக் கூடாது என சட்டம் உள்ளதா?
கைதுசெய்ய அழுத்தம்
கடந்த ஆண்டு 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது.
புதிய கேள்விகள் ஒன்றுமில்லை. என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன. பொலிஸ் நிலையத்திற்கு தாமதமாக வர பொலிஸாரே காரணம்.
முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதித்தனர்.
பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது” என்றார்.
முதலாம் இணைப்பு
நடிகை விஜயலஷ்மி அளித்த பாலியல் முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றினார் என்று நடிகை விஜயலட்சுமி பாலியல் முறைபாடு ஒன்றை அளித்திருந்தார்.
கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த முறைப்பாட்டை இரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விசாரணை அறிக்கை
மேலும், 12 வாரத்திற்குள் விசாரணையை முடித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து, விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய பொலிஸார், சீமானையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
பின்னர் அவரது வீட்டில் ஒட்டப்பட்ட விசாரணை அறிக்கை கிழிக்கப்பட, இந்த விவாகரத்தில் சீமானின் பாதுகாவலர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.