அனோஜனுக்காக கொழும்பில் போராட்டத்தில் களமிறங்கும் சீலரத்ன தேரர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜனின் பெற்றோரை ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.
குறித்த குழு, இன்று (22) நேரில் விஜயம் செய்து குடும்பத்தினருக்குத் தமது ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.
கல்முனை, நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அனோஜனின் இல்லத்திற்குச் சென்ற அக்குழுவினர், குடும்பத்தினருக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்ததுடன், அனோஜனைத் தண்டனையிலிருந்து மீட்பதற்காகத் தாம் முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்துத் தெளிவுபடுத்தினர்.
கொழும்பில் போராட்டம்
இச்சந்திப்பின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர், "அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி நாளை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்திற்கு நேரில் சென்று அனோஜன் தொடர்பான விசேட கோரிக்கை மனு ஒன்றைக் கையளிக்கவுள்ளோம்.
அதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை (28) கொழும்புக்கு வருகை தருமாறு அனோஜனின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்” என்றார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அனோஜனின் குடும்பத்தினரும் அன்றைய தினம் கொழும்புக்கு வருகை தரச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஊடகங்கள் முன் அனோஜனின் தாயார், தனது மகனை மீட்டுத் தருமாறு இலங்கை மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததுடன், தனது மகன் செய்த தவறுக்காக மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரி நின்றார்.