பண்டிகை காலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் : தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு
ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (IGP Deshabandu Tennakoon) வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்றன. இது விழிப்புணர்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
விசேட நடவடிக்கை
பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது பாதுகாப்பிற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு நிலைமைகள் விரைவாக மாறலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அளவில் இல்லாவிட்டாலும், ஏனைய சம்பவங்கள் நிகழலாம். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும்." என சுட்டிக்காட்டியுள்ளார்.
ரமழான் பண்டிகை
அதேவேளை, ரமழான் கொண்டாட்டங்களின் போது மசூதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தியுள்ளதாகவும், 7,500இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, ரமழான் பண்டிகையின் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் முப்படையினரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள மசூதிகளின் மவ்லவிகளை சந்தித்து இந்த பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள 2,453 மசூதிகளில் 5,580 பொலிஸ் அதிகாரிகள், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 முப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |