நான்கு ஆளுநர்களை பதவி விலகுமாறு அவசர அறிவுறுத்தல்
4 மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களையே இவ்வாறு பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுநர் பதவிகளில் மாற்றம்
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் தயா கமகேவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண ஆளுநர்
அத்துடன், மத்திய மாகாண ஆளுநர் பதவி முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், வடக்கு மாகாண ஆளுநராக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்று கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.