மாணவிகளின் கழிவறைக்குள் இரசிய கமரா! - கம்பஹா பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹாவில் பயிற்சி வகுப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் நவீன கமெரா பொருத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கம்பஹாவில் பயிற்சி வகுப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசமான செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளதாக மாணவிகள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், பலரும் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் கம்பஹா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை நியாயமான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சி வகுப்பின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், விரைவில் சந்தேகநபரை கைது செய்ய முடியும் என்று கம்பஹா பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி....
மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிகளுக்கு அதிர்ச்சி - கழிப்பறைக்குள் சிக்கிய ரகசிய கமரா



