மட்டக்களப்பில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் ஒரு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் ஊடாகவும் இன்றைய தினம் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் சகாயமாதா ஆலயம், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலம், சர்வோதயம், ஊறணி சரஸ்வதி வித்தியாலயம், கறுவப்பங்கேணி விபுலானந்த வித்தியாலயம், அருணோதய வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயம் என்பன ஊடாக தடுப்பூசி வழங்கப்படுகின்றன.
இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்படும் அதேவேளையில் முதலாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதனின் தலைமையில் இந்த தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பெருமளவானோர் இன்றைய தினம் தடுப்பூசிகளைப் பெற்றுச்சென்றதை காணமுடிந்தது.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
