மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று
2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நிகழ்வுகளில் இரண்டாம் நாள் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுண்டிகுளம் சந்திப் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனைகள் நடைபெற்றுள்ளது.
அப்போது, சுண்டிகுளம் சந்தியிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபம் வரை மாவீரரை பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீதி ஊடாக மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் மலர் வணக்கம் நிகழ்வும் நடைபெற்றதுடன் மாவீரரின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.


செய்தி - தேவந்தன்
புதுக்குடியிருப்பு
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இந்த ஆண்டும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அந்தவகையில், புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும் , கோம்பாவில் மக்கள், இளைஞர்கள் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது.


செய்தி - ஷன்
திருகோணமலை
மாவீரர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தின் மாவீரர்கள் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இன்று (22.11.2025) இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த மாவீரர் தின நிகழ்வில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக உணர்வுபூர்வமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அக வணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


செய்தி - ரொஷான்
சம்பூர்
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


செய்தி - கியாஸ் ஷாபி
வடமராட்சி
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் அனுஷ்டிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனுஷ்டிப்பு இன்றையதினம் (22.11.2023) உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல நினைவுத்தூபியில் நடாத்தப்பட்டுள்ளது.

செய்தி - எரிமலை
சனசமூக நிலையம்
யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் சனசமூக நிலையத்தில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை சூடி அஞ்சலி செய்யப்பட்டது.

செய்தி - தீபன்
முல்லைத்தீவில் மண்டபம்
மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் ஒன்று இன்று (22) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த மாவீரர் மண்டபம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.


செய்தி - கீதன்
முள்ளிவாய்க்கால் மேற்கு
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் மேற்கு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் முள்ளிவாய்க்கால் மேற்கு பாடசாலை முன்பாக இருந்து மங்கள வாத்திய இசையுடன் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.


செய்தி - கீதன்
முள்ளியவளை
முள்ளியவளை வடக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் இளைஞர்களின் ஒத்துளைப்புடன் ஒரு கிராமத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு பொதுநோக்கு மண்டபத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மாவீரர்களின் பெற்றோர்கள் செங்கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாவீரர் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

செய்தி - கீதன்
கொக்கிளாய்
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிராமத்தில் உள்ள மாவீரர்கள் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு, இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
செம்மலைப்பகுதியில் முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் இருந்து மங்கள வாத்தியத்துடன் மாவீரர்கள் பெற்றோர்கள் கையில் சுடர் ஏந்தியவாறு அழைத்து வரப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பந்தலில் மாவீரர் வணக்க நிகழ்வும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் நடைபெற்றுள்ளது.


செய்தி - கீதன்
அராலி
மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (22.11.2025) மாலை 3 மணியளவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மக்களின் ஆதரவுடன் யாழ். அராலியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாவீரர்களது பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டு மாவீரர் கப்டனின் தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

செய்தி - ஷன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |