திருகோணமலையில் காணாமல் போன 3 மீனவர்களையும் ஆறாவது நாட்களாக தேடும்பணியில் சகமீனவர்கள்
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் காணாமல் போன மூன்று மீனவர்களைத் தேடும் பணிகள் 6வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
திருக்கடலூர் பகுதியில் கடந்த 23ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் கடலுக்குப் படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை.
இவர்களைத் தேடும் பணியில் திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தினர் இன்று (28) ஆறாவது நாட்களாகவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் ஜெயசங்கர் சஞ்சீவன் (21) ஜீவரெட்ணம் சரன்ராஜ்(34) சிவசுப்ரமணியம் நதுசன்(21) என்பவர்களேஆவார்.
இவர்களைத் தேடிப் பல படகுகள் ஆழ்கடலுக்குச் சென்றும் இவர்களை இன்னும் கண்டுகொள்ள முடியவில்லையெனவும் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மூன்று மீனவர்களின் குடும்பத்திற்குத் திருகோணமலையை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்றைய தினம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
இதன் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கடந்த 6 நாட்களாகக் கடலுக்குச் சென்று தங்களுடைய பிள்ளைகள் இன்னும் வீடு திரும்பவில்லை எனவும் மிக விரைவில் அவர்களை மீட்டுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகளை மீன்பிடி திணைக்களமும் மீன்பிடி அமைச்சரும், அனர்த்த முகாமைத்துவ திணைக்களமும் இணைந்து மீட்டுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சமூக அபிவிருத்தி கட்சியின்
பொதுச்செயலாளர் குகதாஸ் பிரகாஷ் நேரில் சென்று பேசியதுடன், ஆறுதல்
வழங்கியதையும் காணக் கூடியதாகவுள்ளது.


