கடலில் குளிக்கச் சென்றவர்களுக்கு நிகழ்ந்த வீபரிதம்! இருவர் மீட்பு - ஒருவர் மாயம் (Photos)
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் குளிக்கச் சென்று 3 பேர் காணாமல் போயிருந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலர் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு சென்றிந்த நிலையில் நேற்று (16) பிற்பகல் 1.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது பாரிய அலையொன்று அடித்துச் சென்றதில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காணாமல் போனவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சுற்றுலா வந்தவர்களில் 13 பேர் கடலில் நீராட சென்றதாகவும் அவர்களில் நுவரெலியா, தலவாக்கலையைச் சேர்ந்த செல்வன் சமல் (வயது 21) மற்றும் தேஹிககொட்டுவ, நாளந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரியங்கர பண்டார (வயது 28) மற்றும் பட்டியமுல்ல,தம்பகஹவெல, தலாத்துஓயா பிரதேசத்தைச் சேர்ந்த (வயது 21) மூவருமே காணாமல் போயுள்ள நிலையில் உப்புவெளி பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் பட்டியமுல்ல,தம்பகஹவெல, சதலாத்துஓயா பிரதேசத்தைச் சேர்ந்த (வயது 21) நபர் இதுவரை மீட்கப்படாத நிலையில் குறித்த நபரை தேடும் பணியில் உப்புவெளி பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கடற்கரையில் கடல் சற்று கொந்தழிப்பான நிலை காணப்பட்ட போதிலும் கடலில் குறித்த தூரத்திற்கு மேலாக செல்ல வேண்டாம் என சிவப்பு கொடி நடப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிலாவெளி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதையும் பொருட்படுத்தாது நடந்து கொள்வதனால் இவ்வாறான அர்த்தங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது







