பாடசாலைகள் தான் நல்லிணக்கத்தினையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம்! சுதர்சினி ஸ்ரீகாந்
பாடசாலைகள் தான் நல்லிணக்கத்தினையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம், மாணவர்கள் பிற சமயங்களை அறிந்து அது தொடர்பாக கருத்தாடல் செய்வது, சமய நல்லிணக்கத்திற்கு ஒரு நல்ல சகுனம் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 'ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாப்பதில் சமயங்களின் பங்களிப்பு' எனும் தொனிப்பொருளில் பல சமய கருத்தாடல் நிகழ்வொன்று இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும், சமாதானத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் வரிசையில் இக்கருத்தாடல் நிகழ்வு அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலில் இம்முறை தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்டது.
இதன்போது மட்.வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலை சார்பாக பருனி நவரட்னராஜா, மட்.மெதடிஸ் மத்திய கல்லூரி சார்பாக யுவராஜ் பிரதாபன், காத்தான்குடி மத்திய கல்லூரி சார்பாக எம்.ஜே.எம். சாபிர், மற்றும் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயம் சார்பாக எம்.எஸ். ஹைபா மற்றும் எம். பாதிமா மொனா சுஆத் ஆகிய மாணவ,மாணவிகள் பங்குபற்றியுள்ளனர்.
இம்மாணவர்கள் தமது சமயம் தவிர்ந்த பிற சமயங்கள் கூறும் ஒழுக்க விழுமியங்கள் பற்றிக் கருத்தாடல் செய்துள்ளனர்.
இதன்போது இம்மாணவர்களுக்கான கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன், சமயத்தலைவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர தொலஸ் மகே பகண எனும் 12 மாத விளக்கு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புத்தகம் வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தாளங்குடா பொது நூலகத்திற்கு ஒரு தொகைப்புத்தகம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் இந்திரா மோகன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ. ஜெய்னுலாப்தீன் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.







